உம் அல் குரா நாட்காட்டி – ஓர் ஷரி'யத்து - சுருக்கமான விளக்கம்

(அஹில்லாவின் அடிப்படையில் , திருமறையின் ஆதாரத்தில்)

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......அவன் அளவற்ற அருளாளன் நிகரில்லாக் கருணையாளன் !

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே !

அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்வித கோணலையும் (முரண்பாட்டையும்) வைத்துவிடவில்லை. இது உறுதியான ............... வேதமாகும்.                    

(18:1,2)

உமக்கு இவ்வேதத்தை  நாம் இறக்கியருளியுள்ளோம். அது யாவற்றையும் மிகத்தெளிவாக விவரிக்கக் கூடியதாய் இருக்கிறது.                   

(16:89)

அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் , அவர்களின் குடும்பத்தார் மீதும் , உத்தம ஸஹாபாக்களின் மீதும் , நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

அல்லாஹ்வின் வேதமாகிய திருமறைக் குர்ஆன் சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக் கப்பட்ட) கணக்கின்படியே இருக்கின்றன.(55:5) என்றும் இவ்வுலகங்கள் படைக்கப்பட்ட நாளிலி ருந்தே அல்லாஹ்வின் பதிவுப்புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டிற்கு பண்ணிரண்டு(9:36) என்றும் அந்த ஆண்டுகளின் எண்ணிக்கையையும் மாதங்களின் கணக்கினையும் சந்திரனுக்கு அவன் நிர்ணயித்துள்ள மனாஸிலின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்(10:5)  என்றும் திட்டவட்டமாக அறிவிக்கின்றது.

அல்லாஹ்வின் வேதம் சந்திரனின் மனாஸிலை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் தலைப் பிறையைக் கண்களால் கண்டபின்னரே மாதத்தை தீர்மானிக்க வேண்டும் எனக் காட்டித்தந்துள்ளார்கள். திருமறைக் குர்ஆனின் தெளிவான வசனங்களும் நபிவழியும் ஒன்றுக்கொன்று முரண்படுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதற்கான காரணங்களை இன்றைய முஸ்லிம் சமுதாயம் தெளிவாக அறிந்து தங்களுடைய மார்கச் சட்டங்களை முறையாக செயலாற்ற வேண்டும் என்பதே இந்த விளக்கவுரையின் முக்கிய நோக்கம்.     

நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தை அறிந்து அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முதலில் அத்தியாயம் 10 சூரா யூனுஸின் 5வது வசனத்தின் பொருளாக்கத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவன்தான் சூரியனை ஒளிவிளக்காகவும் அந்தச் சந்திரனை இலங்கிக் கொண்டிருப்பதாகவும் ஆக்கினான் : மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (ஒவ்வொரு மாதத்தின்) கணக்கினையும் (நீங்கள்) அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே (சந்திரனாகிய) அதற்கு பல மன்ஸில்களையும் நிர்ணயம் செய்துவிட்டான். சத்தியத்துடனேயே (தன்னுடைய திட்டத்தின்படியே) அல்லாது அல்லாஹ் இவற்றை (இவ்வாறு) படைக்கவில்லை: கல்வியறிவுபெற்ற (ஆலிம்கள் , உலமாக்களின்)  சமுதாயத்திற்கு (இறைவனின்) இந்த அத்தாட்சிகளில் தீர்க்கமான விளக்கங்கள் உள்ளன.

(10 : 05)

மேலும் வசனம் (10:05)ஐ மறுபடியும் ஒருமுறை பாருங்கள்:

மேலும் (நீங்கள் அதிலிருந்து) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (ஒவ்வொரு மாதத்தின்) கணக்கினையும் அறிந்து கொள்வதற்காகவே (சந்திரனாகிய) அதற்கு மன்ஸில்களை நிர்ணயம் செய்து விட்டான். கல்வியறிவு பெற்ற (உலமாக்களின்) சமுதாயத்திற்கு (இறைவனின்) இந்த அத்தாட்சிகளில் தீர்க்கமான விளக்கங்கள் உள்ளன.

இந்த வசனத்தில் லி கவ்மி யஹ்லமூன் என்று இல்மையுடைய , கல்வியறிவு பெற்ற , ஆலிம்கள் , உலமாக்களின் சமுதாயத்திற்கு என்று இறைவன் மேற்கோள் காட்டுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரபி அகராதியின்படி மார்க்கக் கல்வியினை பயின்றவர்கள் மட்டும் ஆலிம்கள் , உலமாக்கள் அல்ல. மாறாக அறிவியல் கல்வி , உலகக் கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் உலமாக்களே.

எனவேதான் (2:184)ல் ''அய்யாமன் மஹ்துதாத்'' எனக் குறிப்பிட்ட சில நாட்களில் அதாவது (2:185)ன்படி எவர் ரமலான் மாதத்தினை அடைந்துகொள்கிறாரோ அவருக்கு அம்மாதத்தினுடைய நாட்களில் மட்டுமே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து (2:189)ல் அந்த மாதத்தை அஹில்லத்தின் அடிப்படையில் எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதையும் இறைவன் திருமறையில் பதிவு செய்கிறான். ஆனால் நபி(ஸல்) இதற்கு என்ன விளக்கம் தருகிறார்கள் என்பதைக் காண்போம்.

யஸ்அலூனக்க அனில் அஹில்லா ! குல் ஹிய மவாகீத்து லின்னாஸி வல்ஹஜ் ! ....... (2:189). இந்த வசனத்திற்கு நபி(ஸல்) அளித்த விளக்கங்களை பாருங்கள்.

இன்னல்லாஹ அஸ்ஸவஜல் ஜஅலல்லாஹுல் அஹில்லத்த மவாகீத்த லின்னாஸி ஃப ஸூமு லிருய்யத்திஹி , வஅப்திரு லிருய்யத்திஹி ஃப'யின் கும்ம அலைக்கும் ஃப உத்து ஸலாஸீன யவ்மன்.       

(முஸ்னத் அஹ்மத்)  

மனிதர்களுக்கு மாதத்தின் தவனையை அல்லது முடிவைக் காட்டவே அஹில்லா என்ற  (பிறைகள் தோன்றும்) மனாஸிலை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். (ஆனால் நாம் எழுதவும் , எண்ணவும் தெரியாத உம்மி சமுதாயத்தினராக உள்ளோம் அதாவது அந்த மனாஸிலை கணக்கிட்டுக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை.) எனவே (அஹில்லா என்ற அந்த பிறைகள் தோன்றும் மனாஸிலில் பிறை) தென்பட்டதிலிருந்து நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் : (மறுபடியும் அந்த மனாஸிலில் பிறை) தென்பட்டதும் நோன்பை முடித்துக் கொள்ளுங்கள் : உங்களுக்கு தென்படுவதை விட்டும் (அப்பிறை) மறைந்திருந்தால் மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். ஆதாவது ஒருதடவை 29 ஆகவும். ஓருதடவை 30 ஆகவும் இருக்கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி): நூல்கள் : புகாரி , முஸ்லிம் , அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது தம் கைகளைத் தட்டி மாதம் இப்படித்தான் இப்படித்தான் என்று கூறினார்கள். மூன்றாவது தடவை தமது கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.

எனவே பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களைவிட்டும் அது மறைந்திருந்தால் (மாதத்தை) முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) :நூல்: முஸ்லிம்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு , நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் நோன்புப் பெருநாள். ஹஜ்ஜூப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜூப் பெருநாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) : நூல் :திர்மிதி

ஆனால் எப்போது இந்த நிலை மாறி இந்த மனித சமுதாயம் ''கவ்மி யஹ்லமூன்'' என்று இறைவன் (10:5)ல் மேற்கோள் காட்டும் கல்வி அறிவுபெற்ற உலமாக்களின் சமுதாயமாக மாறிவிடுகின்றதோ அப்போது (2:189)ல் இறக்கிவைக்கப்பட்ட மார்க்கச் சட்டமும் அப்படியே நிலைநாட்டப் பட்டுவிடவேண்டும் என்பதை;தான் இந்த அறிவிப்புகளில் வலியுறுத்துகிறார்கள்.

நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்புகள் இந்த மார்க்கச் சட்டத்தைப் பொருத்தவரையில் அதனைப்பற்றி முடிவெடுக்க வேண்டிய பொருப்பு அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழும் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிசெய்கின்றது.

அன்றைய சமுதாயத்தினர் அவர்களுக்கு இயன்ற முறையில் தத்தம் பகுதியில் மட்டுமே பிறையைக் கண்களால் கண்டு மாதங்களைத் தீர்மாணித்தார்கள். இன்றைய  சமுதாயத்தவர்களில்; சிலர் தகவல்களை ஏற்றும் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தூரத்தை அளவுகோளாக வைத்து தகவல்களையும் ஏற்கமறுக்கும் சாராரின் வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்றதே.

அவர்கள் தகவல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு அளவுகோலாக காட்டும் அறிவிப்புகளை சிந்தித்துப் பார்த்தால் அந்த அறிவிப்புகளில் 30 நாட்கள் முடிவடைந்த பின்னர் கிடைக்கும் தகவல்களையே நபித் தோழர்கள் நிராகரிக்கின்றனர் என்ற உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். உரிய நேரத்தில் கிடைத்த தகவல்களை நபி(ஸல்) ஏற்று செயல்பட்டுள்ளார்கள் என்பதை ஹதிஸ் கிரந்தங்களிலிருந்து காணமுடிகின்றது. எனவே இங்கு தூரம் அளவுகோல் அல்ல. காலம் மட்டுமே அளவுகோலாகும்.

இன்ஷா அல்லாஹ் இன்றைய சமுதாயத்தவர்களாகிய நாம் உலகளாவி ஒன்றுகூடி நிறைவேற்ற வேண்டிய இந்த ஷரியத்தினை இப்போது ஒட்டுமொத்த சமுதாயமாக ஓரணியில் திரண்டுநின்று நிலைநாட்டுவோம். இந்த ஷரியத்தை நிலைநாட்ட வேண்டிய பொருப்பும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் இந்த வசனம் இறங்கிய பின்னர் மாதத்தை தீர்மாணிக்கும் விஷயத்தில் என்ன முடிவெடுத்தார்கள் ? மக்களுக்கு எவ்வாறு கட்டளையிட்டார்கள் ? என்பதை இதற்கு முன்னர் தெளிவாக விளங்கிக்கொண்டோம். ஆனாலும் இந்த வசனத்திற்கு திருமறையின் சிறந்த விரிவுரையாளர்களில் பலரும் பராவு பின் ஆஸிப்(ரழி) அவர்கள் வாயிலாக புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தவறான கருத்தையே அவர்களுடைய விரிவுரைகளில் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அது ஒரு நபிமொழி அல்ல. பராவு பின் ஆஸிப்(ரழி) அவர்களின் தனிப்பட்ட கருத்துதான்.

எனவே (2:189)ஆம் வசனத்தின் முறையான பொருளாக்கத்தை அறிந்து கொள்வோம்.

(நபியே) அஹில்லாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. மேலும் அவ்வீடுகளுக்குள் மேற்புறமாக (அல்லது பின்புறமாக) வருவதில் நன்மை(புண்ணியம்) இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே நன்மை அடைவோராவார். எனவே அவ்வீடுகளுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

(2:189)

முதலில் அஹில்லா என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்வோம். அஹில்லா (பிறைகள்) என்று (2:189)ல் இறைவன் ஹிலாலை (பிறையை) பன்மையில் கூறுவது சந்திரன் சங்கமித்து உடனே தன்னுடைய புதுச்சுற்றை துவங்கி முதலில் சில நாட்களுக்கு பிறைகளாக காட்சிதரும் அந்த முதல் மனாஸிலையே. எனவே அஹில்லா என்பதற்கு 'பிறைகள்(தோன்றும் மனாஸில்)' – (PHASES OF THE NEW) MOONS  என்று பொருளாக்கம் செய்வதே அறிவுப்பூர்வமானதாகும்.

இரண்டாவதாக மவாகீத் என்ற வார்த்தை. இதற்கு நேரடியான பொருள் 'முடிவு' – DEADLINE என்பதாகும். அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் ஒவ்வொரு மாதத் தவணையிலும் திரும்பத் திரும்ப தொடர்ந்து வருகின்ற ஒரு நிலை என்பதால் இந்த வசனத்தில் இடம் பெரும் மவாகீத் என்ற வார்த்தையை '(ஒவ்வொரு மாதத்தின்) முடிவையும்' என்று பொருளாக்கம் செய்வதே முறையான பொருளாக்கமாகும்.

மூன்றாவதாக இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடும் ஹஜ் : இது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்காவை நோக்கி வருகின்ற முஸ்லிம்கள் அரஃபா என்ற ஓர் திறந்த வெளியில் துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள் ஒன்றுகூடி நிறைவேற்ற வேண்டிய ஒரு உலகளாவிய வணக்க வழிபாடு.

இதைத்தான் திருநபி(ஸல்) : (அல் ஹஜ்ஜூ அரஃபத்து) அரஃபா என்ற திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடுவதே ஹஜ் என்றும்: பத்தாம் நாள் சுப்ஹூவுக்குமுன் யார் அரஃபாவை அடைந்துவிட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து விட்டார் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் இப்னி யஃமர்(ரலி) : நூல் : திர்மதி , நஸயீ

மேலே நாம் எடுத்துக் கொண்டுள்ள திருநபி(ஸல்) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள். துல்ஹஜ் 9ம் நாளில் அரஃபா என்ற திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடுவதையே ஹஜ் என அறிவிக்கின்றார்கள். எனவே இந்த அறிவிப்பின்படி ஹஜ் என்பது குறிப்பிடப்பட்ட ஒரு நாளில் நிறைவேற்ற வேண்டிய ஒரு செயல் என்று பொருள் கொள்வதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. எனவே இந்த வசனத்தில் இடம் பெரும் ஹஜ்ஜையும் காட்டுகிறது என்பதனை ஹஜ்ஜை (நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரஃபா நாளை)யும் காட்டுகிறது என விரிவாக்கம் செய்வதால் எவ்வித முரண்பாட்டிற்கும் இடமில்லை.

நான்காவதாக இந்த வசனத்தி;ல் இடம் பெரும்; அல்புயூத் (அந்த வீடுகள்) என்பதற்குரிய முறையான விளக்கத்தை அறிந்து கொள்வது. புயூத் என்பதற்கு அரபி அகராதிகளின்படி (STAGES , PHASES) நிலைகள், மனாஸில் என்றும் பொருளாக்கம் கொள்ளலாம். இந்த வசனம் 'அஹில்லா' என்ற சந்திரனின் ஒருநிலைய விளக்க முற்படுவதாலும், மேலும் இறைவன் சந்திரனைப்பற்றிக் கூறும் போது (10:5), (36:39) போன்ற வசனங்களில் அதன் மனாஸிலை மட்டுமே சுட்டிக்காட்டுவதாலும் இந்த வசனத்தில் இடம்பெரும் (அல்புயூத்) அந்த வீடுகள் என்பதற்கு இந்த வசனத்தின் கண்ணோட்டத்தில் (சந்திரனின்) அம்மனாஸில் என பொருள் கொள்வதே முறையானதாகும்.

இனி இந்த வசனத்திற்குரிய முறையான பொருள்தரும் விரிவாக்கத்தை காண்போம்.

(நபியே!) பிறைகள்(தோன்றும் மனாஸிலைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் : அவை மக்களுக்கு (ஒவ்வொரு மாதத்தின்) முடிவையும், ஹஜ்ஜை (நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரபாவின் தினத்தை)யும் அறிவிப்பவையாகும். மேலும் (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் மேற்புறமாகவோ (அல்லது பின்புறமாகவோ) வருவதில் நன்மை (புண்ணியம்) இல்லை: ஆனால் இறைவனை மிகவும் அஞ்சி (அவன் கட்டளையின்படியே) செயலாற்றுபவரே நன்மை அடைந்தோராவர். எனவே (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை (அவன் விதியாக்கியுள்ள கட்டளைகளை நிறைவேற்றும் விஷயத்தில்) அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

இனி இந்த வசனத்திற்குரிய விரிவான விளக்கத்தை காண்போம்.

(நபியே!) பிறைகள்(தோன்றும் மனாஸிலைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் : அவை மக்களுக்கு (ஒவ்வொரு மாதத்தின்) முடிவையும், ஹஜ்ஜை (நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் தினத்தை)யும் அறிவிப்பவையாகும்.  

அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் (Phases of the new moon) மக்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவையும் அதாவது அந்த மாதம் 29 நாட்களில் முடிவடைகிறதா அல்லது 30 நாட்களில் முடிவடைகிறதா என்ற அந்த மாதத்தின் தவனையையும் காட்டுகின்றது. மேலும் இவ்வுலகம் அனைத்தும் ஒன்றினைந்து அல்லாஹ்வை வணங்கும் ஒரே நாளாகிய யவ்முல் அரஃபா என்றழைக்கப்படும் ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் தினத்தையும் காட்டுகின்றது.

ஒவ்வொரு மாதத்தின் தவணையையும் , உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிடப்பட்ட நாளையும் அஹில்லா காட்டித்தரும் என்றால் அந்த மாதங்களின் குறிப்புகளை அதாவது மாதங்கள் துவங்குவதையும் அவை முடிவதையும் மேலும் அந்த மாதங்களில் அமையும் மிக முக்கியமான நாட்களையும் நிச்சயமாக அட்டவனை படுத்திவிடலாம். இதன் யதார்தம், அஹில்லாவின் அடிப்படையில் மட்டுமே இந்த அகிலத்தின் நாட்காட்டி (UNIVERSAL ISLAMIC CALENDAR) அமைய வேண்டும் என்பதனை இந்த வசனம் (2:189) தெளிவாக எடுத்துரைக்கின்றது.

'மேலும் (பிறைகள் தோன்றும்) அம்மனாஸிலுக்குள் மேற்புறமாகவோ (அல்லது பின்புறமாகவோ) வருவதில் நன்மை (புண்ணியம்) இல்லை.'

இறைவனின் இந்த வேதவாக்கு நாம் இதுவரையில் நிலைத்திருந்த நம்முடைய நிலையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள அங்கிகாரம் வழங்குகின்றது. மாதங்களை கணக்கிட கண்களால் பிறையைக் காண வேண்டும் என்பது ஒரு கட்டாய நிபந்தனையல்ல என்பதைத் தெளிவாக்குகின்றது.

அதாவது இன்றுவரை நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படியே நாம் புதுப்பிறையைக் கண்களால் பார்த்து அதன்படியே மாதங்களை கணக்கிட்டு வந்தோம். உலகின் கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் இடையில் ஏதாவது ஒருசில பகுதிகளில் தான் அந்தப் புதுப்பிறை தென்படும். அவ்வாறு தென்படும் அப்புதுப் பிறையை கண்களால் பார்த்துத்தான் அந்த மாதத்தினை துவங்க வேண்டுமானால் அப்பிறை முதலில் எங்கு தென்படுகின்றதோ அங்கிருந்து மட்டுமே அம்மாதத்தை முதலில் துவங்க முடியும்.

இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதற்கு அதில் எவ்வித நன்மையோ, புண்ணியமோ உங்களுக்கு இல்லை என்றும் மாறாக கண்களால் பிறையைப் பார்த்து அந்தப் பிறைகள் தோன்றும் மனாஸிலுக்குள் செல்வது மக்களுக்கு சலுகையாக்கித் தரப்பட்ட ஒரு தற்காலிகச் சட்டமே அன்றி அதில் நிலைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை என்பதையும் இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

பிறை விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகள் செயல்முறைக்கு மிகவும் இலகுவானதுதான் என்றாலும் அதற்கு வரையறைகள் உள்ளன. அதனடிப்படையில் முற்கூட்டியே மாதங்களை தீர்மானிக்க முடியாது. முழுமையான ஒரு கிழமையில் ஒரு தேதியில் மாதங்களைத் துவங்கவும் முடியாது. எனவேதான் இதுவரையில் நிலைத்திருந்த அந்த சலுகையான தற்காலிகச் சட்டத்தில் மேலும் நீடிப்பதால் எவ்வித நன்மையோ, புண்ணியமோ உங்களை வந்தடைந்துவிடுவதில்லை என்று இறைவன் இங்கு தெளிவாக்கிவிட்டு அடுத்தகட்டமாக நன்மை, புண்ணியம் என்றால் என்ன? என்பதனையும் விளக்குகின்றான்.

'ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே நன்மை அடைந்தோராவர்.'

இங்கு, இறைவனை மிகவும் அஞ்சி அவனது திருப் பொருத்தத்தை மட்டுமே நாடியவர்களாக அவனது கட்டளைகளுக்கு இணங்கி தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்பவர்களே நற்செயல் புரிந்தவர்கள் என்றும் அவர்களே இறைவனிடத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என்றும் விவரிக்கின்றான்.

மேலும் இதுவரையில் இறைவனின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்திருந்த எளிமையான வழிமுறையை கடைபிடித்து வந்தோம். இறைவன் நமக்கு சூரியனையும் சந்திரனையும் இரவையும் பகலையும் வசப்படுத்தித் தந்துள்ளான் என்னும் வேதவாக்குகளை மெய்ப்பிக்கும் விதமாக அறிவியலின் அடிப்படையில் இன்று நாம் அறிந்து கொண்டுள்ள கணக்கீட்டை இறைவனின் கட்டளையின்படியே இனி நாம் அமல்படுத்தப் போகின்றோம். (இன்ஷா அல்லாஹ்)

'எனவே (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்:'

இங்கு (பிறைகள் தோன்றும்) அம்மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள் என்று அல்லாஹ் ஒரு சட்டத்தை விதியாக்குகின்றான். எனவே முதலில் இறைவன் இங்கு விதியாக்கும் மார்கச் சட்டத்தையும் (ஷரியத்தையும்) அதனை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வோம்.

அஹில்லா ஒவ்வொரு மாதத்தின் தவனையையும் அல்லது முடிவையும்; அந்த மாதத்தின் குறிப்பிடப்பட்ட நாளையும் காட்டித்தரும் என்பதை (2:189)ன் முதல் பகுதி தெளிவாக்குகிறது. மேலும் ஒரு மாதத்தின் தவனை 29 அல்லது 30நாட்கள் என்பது நபிமொழி. எனவே ஒரு மாதத்தின் ஓர் அங்கமான ஒரு நாளைப்பற்றி சிறிது விளங்கிக்கொள்வோம்.

கண்களுக்கு பிறை(ஹிலால்) தென்பட்டுவிட்டால் அந்த இடத்தில் அன்றோடு அம்மாதத்தை முடித்து விடுகின்றறோம். ஆனால் அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் துவங்கி விட்டால் அப்போது உடனே பிறை உருவாகிவிடுவதில்லை என்றாலும் திட்டவட்டமாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அந்தச் சுற்று முடிவடைந்துவிட்டது என்பதை அது துள்ளியமாகக் காட்டி விடுகின்றது.

எனவே மாதத்தின் முடிவைக்காட்டும் அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் துவங்கி விட்டால் ஒருநாள் முதன்முதலாக உதயமாகும் அந்தக் கீழ்திசையிலேயே அந்த மாதத்தின் கடைசிநாளையும் முடிக்க வேண்டும். அப்போதுதான் அம் மனாஸிலுக்குள் முiறாயக வாசல்கள் வழியாகவே வாருங்கள் எனும் இறைவனின் கட்டளைக்கேற்ப அடுத்த மாதத்தின் முதல்நாளை முறையாக கீழ்திசையிலிருந்து ஒரு முழுமையான நாளில் துவங்க முடியும்.

'எனவே (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்:'

இறைவனின் இந்தக் கட்டளையின்படி ஒருமாதத்தின் முடிவைக் காட்டும் அஹில்லா ஏற்பட்டுவிட்டால் அந்த மாதத்தை ஒரு நாள் உதயமாகும் கீழ்திசையில் முடிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்தே மறுநாளின் வைகறையிலிருந்து புதிய மாதத்தை துவங்கி கஃபாவை முன்னோக்கி அடைய வேண்டும்.

'மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு.'

இறைவன் தடுத்தவற்றை விட்டும் நிச்சயமாக நாம் விலகிக் கொள்ள வேண்டும். அவன் ஏவியவற்றை அப்படியே செயல்படுத்த வேண்டும். இதுவல்லாது மனமுரண்டாகவோ அல்லது போதுமான ஞானமின்றியோ இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்பவர்கள் அவனுடைய தண்டனையை அஞ்சிக் கொள்ளட்டும் என அறிவுறுத்தி, இறைவனுக்கு அஞ்சி அவனுடைய கட்டளையின்படியே செயலாற்றுங்கள், உங்களுக்கு வெற்றி நிச்சயம் என வாக்குறுதியளித்து இறைவன் இந்த (2:189)ஆம் வசனத்தை முடிக்கின்றான்.

PART II

''பிறைகள் தோன்றும் அம்மனாஸிலுக்குள் முறையாக வாசல்கள் வழியாகவே வாருங்கள்'' என்று அல்லாஹ் விதியாக்கும் இந்த மார்கச் சட்டத்தை (ஷரியத்தை) கஃபாவை மையமாக்கியே நிறைவேற்ற வேண்டும். அதாவது அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் துவங்கி விட்டால் அந்த மாதத்திற்குள் ஒருநாள் உதயமாகும் கீழ் திசையிலிருந்து கஃபாவை முன்னோக்கி வருபவர்களாக அந்த மாதத்தினுள் நுழைய வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். அதன் செயல்முறையை இப்போது விளங்கிக் கொள்வோம்.

எனவே ''பிறைகள் தோன்றும் அம்மனாஸிலுக்குள் முறையாக வாசல்கள் வழியாகவே வாருங்கள்'' என்று அல்லாஹ் விதியாக்கும் இந்த மார்கச் சட்டத்தை (ஷரியத்தை) மக்காவை மட்டுமே மையமாக வைத்துச் செயலாற்றப்போகிறோம். இதற்கான இரண்டு அடிப்படை வரையறைகளையும் நாம் அறிந்துகொண்டுள்ளோம்.

1.    ஒவ்வொரு நாளும் மக்காவில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தின் போது கீழ்திசையில் மறுநாள் உதயமாகிக் கொண்டிருக்கும்.

2.    ஒவ்வொறு மாதத்தின் 29ஆம் நாளிலோ அல்லது அந்த 29ஆம்நாள் மக்காவில் முடிவடைந்த நிலையிலோ மக்காவின் நேரமாகிய UMM Al-Qura MAKKAH TIME (UMT)யின்படி அந்த மாதத்தின் முடிவைக் காட்டும் அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸிலும் தொடங்கிவிடுகின்றது.

அல்லாஹ் நிர்ணயித்துள்ள இந்த இரண்டு வரையறைகளின்படி அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் ஒவ்வொறு மாதத்தின் 29ஆம் நாளிலும் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர் தொடங்கிவிடுமானால் அந்த மாதம் அந்த 29ஆம் நாளில் முடிவடைந்து விடுகின்றது. எனவே மறுநாளை முறையாக வைகறையிலிருந்து மாதத்தின் முதல்நாளாக கீழ்திசையிலிருந்து துவங்கிவிடலாம். இதைத் தான் அல்லாஹ்வின் திருத்தூதர் திருநபி(ஸல்) அவர்கள் ''மாதம் என்பது 29 நாட்களாக இருக்கும் எனக் கூறினார்கள்.''

ஆனால் அந்த மாதத்தின் 29ஆம் நாளில் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர்வரை அஹில்லா ஏற்படவில்லையானால் மக்காவின் மறுமுணையில் 30ஆம் நாள் துவங்கிவிடுகின்றது. இந்த நாளை அல்லாஹ்வின் திருத்தூதர் திருநபி(ஸல்) அவர்கள் யவ்மு ஷக் அதாவது சந்தேகத்திற்குரிய 30ஆம் நாள் என அழைக்கின்றார்கள். எனவே அந்த மாதத்தை 30 நாட்களைக் கொண்டதாகவே கணக்கிட வேண்டும்.

அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர் அதாவது 29ஆம் நாள் மஃரிபு நேரத்திற்கு முன்னர் தொடங்கிவிடுமானால் அந்த மாதத்தின் பிறை உலகின் மேல்திசையில் உள்ளது என்பதை அறிவியல் ஆதாரபூர்வமாக உறுதி செய்யலாம் , தொலைநோக்கியின் உதவியுடன் காணலாம். சில சந்தர்பங்களில் நம் கண்களால் காண்பதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் 29ஆம் நாள் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர்வரை அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் ஏற்படவில்லையானால் அந்த மாதத்தின் 29ஆம் நாளில் உலகின் எப்பகுதியாயினும் அங்கு பிறை பிறந்துவிட்டது என உறுதி செய்ய முடியாது. எனவே அந்த மாதத்தின் பிறையை 30ஆம் நாளில் மட்டுமே உறுதிசெய்ய முடியும்.

மக்காவை மையமாக வைத்து அஹில்லாவின் அடிப்படையில் 29ஆம் நாளில் மாதத்தை முடிக்கும் நாம் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அந்த 29ஆம் நாளில் புதுப்பிறை பிறந்துவிட்டது என்பதை ஆதாரபூர்வமாக உறுதி செய்யவும் முடிகிறது. அதுபோலவே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் யவ்மு ஷக் எனும் சந்தேகத்திற்குறிய 30ஆம் நாளையும் அஹில்லாவின் அடிப்படையில் தெளிவாக அறிந்து அதன்படி செயல்படவும் முடிகிறது.

''மாதம் என்பது சிலமுறை 29 நாட்களாகவும் சிலமுறை 30 நாட்களாகவும் இருக்கும்'' என்ற நபி(ஸல்) அவர்களின் முன்அறிவிப்பு இன்றைய அறிவியல் உண்மை என்று நிருபனமாகிவிட்டது. வசனம் 2:189 இன் வேதவாக்கின்படி அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் ஒவ்வொரு மாதத்தின் முடிவையும் அதாவது அந்த மாதம் 29 நாட்களில் முடிகிறதா? அல்லது 30 நாட்களில் முடிகிறதா? என்ற அந்த மாதத்தின் தவனையையும் துள்ளியமாக காட்டித்தருகின்றது.  

அல்லாஹ்வின் வேதம் கட்டளையிடும் இந்த ஷரியத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்த வழிமுறைக்கு எவ்விதத்திலும் முரணானது அல்ல. அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்கள் இறைவேதத்திற்கு முற்றிலும் இசைவானது என்பதையே இது உறுதிசெய்கின்றது. அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு மாதத்தையும் அந்தந்த மாதங்களின் பிறையைக் கண்களால் கண்ட பின்னரே துவங்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆன் அந்த மாதங்களை அஹில்லாவின் அடிப்படையில் முற்கூட்டியே தீர்மாணித்துக்கொள்ள வழிவகுத்துத் தருகின்றது.  

(SEE UMM AL-QURA CALENDAR CALCULATIONS FOR 1433H – 1445H GIVEN SEPERATELY)

PART III

நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பின்படி ஹாஜிகள் அரஃபாவில் ஒன்றுகூடுகின்ற தினத்தில் உலகின் ஏனையோர் அரஃபா நாளின் நோன்பை நோற்க வேண்டும். அடுத்த நாளாகிய அறுத்துப்பலியிடும் நாளை உலகின் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் பெருநாள் தினமாக கொண்டாட வேண்டும். நாம் இவ்வாறு செயலாற்றினால் மட்டுமே கீழ்கண்ட நபி(ஸல்) அவர்களின் கட்டளையை நிலை நாட்டியவர்கள் ஆவோம்.

'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜிப் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாள் தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.'

அறிவிப்பவர் :அபூஹூரைரா(ரழி), ஆயிஷா(ரழி), அபூஸயீத்(ரழி): நூல்:முஸ்லீம்

இன்று இறைவனின் திருத்தூதர் திருநபி(ஸல்) அவர்கள் நமக்காக விட்டுச்சென்றுள்ள இந்த ஷரியத்தை (மார்க்கச் சட்டத்தை) முறையாக நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி மக்காவை மையமாகவைத்து அறிவிக்கப்படும் நட்களில் மட்டுமே உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்பைத் துவங்க வேண்டும். நோன்புப் பெருநாளையும் , ஹஜ்ஜிப் பெருநாளையும் கொண்டாட வேண்டும்.

தத்தம் பகுதியில் பிறைகண்டதின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவோம் என்று எவரேனும் இதற்கு மாறு செய்வார்களேயானால் நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பின்படி அவர்கள் தங்களுடைய அமல்களை நாசம் செய்துவிட்ட நஷ்டவாளிகளே ஆவார்கள்.

' நம்பிக்கை கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வை (அவனுடைய மார்கச்சட்டங்களை பேணவேண்டிய விஷயத்தில்) அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி நடந்துகொள்ளுங்கள் : மேலும் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம். '

(3:102)

'(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்தபின்னரும் யார் (கருத்து)வேறுபாடு கொண்டு பிரிந்துவிட்டார்களோ , அவர்களைப்போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகை யோருக்குக் கடுமையான வேதனையுண்டு. '

(3:105)

''(இறுதித் தூதரின் சமுதாயமே ! அல்லாஹ் உங்கள்மீது அருள்புரிந்துள்ள) தீனை நிலைநாட்டுங்கள், அதில் பிரிந்துவிடாதீர்கள். ''                    

(42:13)

ஸதக்கல்லாஹுல் அழீம் !   

வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் !